இந்தியத் திரு அவைச் செய்திகள்
யூபிலி 2025 ஆம் ஆண்டிற்கான திருச்சங்கக் கையேடுகள் வெளியீடு
“கூட்டியக்கத் திரு அவை மாமன்றத்தின் இறுதிக் கட்டத்தின் முதல் அமர்வை நோக்கி நமது தாயாம் திரு அவையானது பயணித்துக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், நாம் மற்றொரு கொண்டாட்டத்தையும் சிறப்பிக்க உள் ளோம். ஆண்டவர் இயேசு பிறந்ததின் 2025 ஆம் ஆண்டு யூபிலி பெருவிழாவையும் நமது கூட்டியக்கத் திரு அவை பயணத்தோடு சேர்த்து நாம் கொண்டாட இருக்கிறோம்” என்று இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் கோவா-டாமன் உயர் மறைமாவட்டத்தின் பேராயர் கர்தினால் பிலிப் நேரி பெராரே கூறியுள்ளார்.
‘நம்பிக்கையின் திருப்பயணிகள்’ என்பதுதான் 2025 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தினுடைய விருதுவாக்கு. இந்த 2025 ஆம் ஆண்டு யூபிலி ஆண்டைக் கொண்டாடுவதற்கான மூன்று முக்கியக் காரணங்கள்: ஆண்டவர் இயேசுவைக் கொண்டாடுவது, திரு அவையைக் கொண்டாடுவது நம்முடைய நம்பிக்கையைக் கொண்டாடுவது ஆகும். 2023 மற்றும் 2024 யூபிலி பெருவிழாவைக் கொண்டாடுவற்கான தயாரிப்பு ஆண்டுகள் ஆகும். அதன்படி 2023 ஆம் ஆண்டில் திருச்சங்கம் என்ன சொல்கிறது என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும். 2024 ஆம் ஆண்டு முழுவதும் செபிக்க வேண்டும். எனவே, இறை மக்களுக்கான வழிகாட்டுதலைப் பெற்றிட இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் நான்கு கோட்பாடுகளை நாம் வாசிக்க வேண்டுமென திருத்தந்தை விரும்புகிறார். நற்செய்தி அறிவிப்புக்கான பேராயம், இரண்டாம் வத்திக்கான் சங்கம் மற்றும் நான்கு கோட்பாடுகளுக்கான பின்னணியை 35 கையேடுகளாகத் தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்தக் கையேடுகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, ATC பதிப்பகத்தால் தயாரிக்கப்பட்டு, CCBI ஆல் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தியத் திரு அவையில் 2023, நவம்பர் 26, கிறிஸ்து அரசர் பெருவிழாவின்போது யூபிலி ஆண்டின் தயாரிப்பு விழா தொடங்கப்படும்.
Comment